Saturday, June 30, 2007

யாருக்காக - முரண் 1

இந்த பதிவு தொடருக்குக்கு சிவாவின் இந்த பதிவு ஒரு வித்து.

தொடருக்கு, முதலில் சில அடிப்படை கருத்துகள்.

விற்க்கும் செயல் (sales function) ஒரு பொருளாதார முரண். (அதைவிட விருப்பங்களின் முரண்).

ஒரு பொருளை விற்பவர் பெரும்பாலும் தனக்கு வேண்டிய வேறு ஏதோ ஒரு பொருளுக்காக தனக்கு (ஒருவேளை) சொந்தமான இந்த பொருள் (அல்லது) சேவையை விற்கிறார். (ஒரு வகையில் அவருக்கு அந்த விற்க்கும் பொருள் தேவையாக இல்லை). வாங்குபவரோ அந்த விற்பனை பொருளை மட்டுமே வேண்டும் (தனது ஏதோ ஒரு தேவைக்காக) என்று வாங்க நினைக்கிறார்.

இதில் என்ன முரண்?

'இது எப்போவும் நடக்கும் விடயம் தானே?' என்று தோன்றுகிறதா? நான் சொல்ல வரும் சேதிக்கு இதுதான் அடிப்படை.

இந்த விருப்பங்களின் முரண்பாடு நம் உள்நோக்கங்களில் அதை ஒட்டிய செயல்களில் வெளிப்படுவதுதான் வேண்டாத விடயம்.

முதலில் நம் உள்நோக்கம் எவ்வாறெல்லாம் செயலாக வெளிவருகிறது என்று பார்ப்போம்.

1. விலை நிர்ணயம் - விற்பனையாளர் தன்னுடய செலவு மற்றும் இலாபம் சேர்த்து விலை நிர்ணயம் செய்வது. இந்த முறையில் வாங்குபவரது நோக்கம் எங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது? உலகத்தில் பாதி பொருட்கள் இப்படித்தான் விற்கப்படுகிறது. பெரும்பாலான பெருந்திரள் வணிக(mass marketed)மாகும் பொருட்கள் அதிலும் 'நானும் உண்டு' (me too) மாதிரி பொருட்கள் விலை பெரும்பாலும் இப்படித்தான். பெருந்திரள் வணிகமாகும், நாம் தினமும் உடனடி உபயோகமாக்கும் பொருட்கள் (சோப்பு, உணவுப் பொருட்கள்) விலை நிர்ணயம் செய்ய முதலில் அடக்க விலையை பார்க்கிறார் வியாபாரி. அதாவது வாங்குபவரது வாங்கும் சக்தி (purchasing capacity) (அ) பயன்பாட்டின் ஒரு பகுதி(worth of usage
value)யாக பொருளின் விலையை நாம் யோசிப்பதில்லை.

பொருளாதாரம் இதை எப்படி பார்க்கிறது என்றால், விலையும் பயன்பாடும் ஒரு புள்ளியில் ஒருமைபடும்போது வாங்குபவர் தனக்கு பிடித்த கட்டுப்படியாகும் விலையை கொடுப்பது சரிதானே என்று வாதிக்கிறது. ஒரு கச்சிதமான போட்டியமைந்த (perfect competition) சந்தையில் (ஆனால் பொருளாதார வல்லுனர்களே அப்படி ஒரு நிலைமை நடைமுறையில் காணக்கிடைக்காது என ஒத்துக்கொள்ளும் விடயம் இது) இப்படி சரியான விலை அமையலாம். பல நேரம் நாம் பார்ப்பது குறைந்த போட்டியாளர்கள் (அ) ஒரே வணிக மையம் விற்பனை செய்யும் பொருளை, சரியான, வேண்டிய அளவான தகவலும் இல்லாமல் பயனர்கள் வாங்க போட்டி போடும் சந்தைகள்தாம்.

இதுவே வாடிக்கையாகி, பெரும்பாலான வியாபாரிகள் மாற்று விலை நிர்ணய யுக்திகளை நினைத்தும் பார்ப்பதில்லை. இதில் கொஞ்சம் வித்தியாசமாய் யோசிக்கும் வியாபாரிகள் 'சுபிக்சா' 'பிக் பசார்' என்று பணம் கொழிக்கிறார்கள், மற்றவர்களை விட சிறிது இலாபம் குறைத்துக் கொடுத்து.

'நானும் உண்டு' (me too) போட்டியிலே ('மைசூர் சாண்டல்' நன்கு விற்றால் 'கோகுல் சாண்டல்' என்றோ 'மைசூல் சாண்டல்' என்றோ பொருளுக்கு பெயரிட்டு விற்பவர்களும் இதே வரிசையில் தான். சிறிது விலை குறையும் என்ற ஒரே ஒரு பயனைத் தவிர வேறு எந்த வகையிலும் நுகர்வோரை நினைத்துப் பார்க்காத புல்லுருவிகள்.

இதில் பல சமயங்களில் நடக்கும் ஒரு கூத்து, ஒரு நல்ல பொருள் அல்லது சேவைக்கு விற்பவர் (முதலில்) நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு இலாபத்தை கொட்டிகொடுக்கவும் மக்கள் இன்றளவும் தயாராக இருந்தும் கூட இந்த மனப்பாங்கு தொடர்வது.

2. மாறுபாடில்லா பொருட்கள் மற்றும் வாங்குவோருக்கு தேவையில்லா விடயங்கள் - உலகத்தில் உள்ள எல்லா சமையல் எண்ணையும் உடலுக்கு கேடுதான் என்கிறார் பெங்களூரில் ஒரு உலகப்புகழ் பெற்ற இதய மருத்துவர். (சமீபத்தில் பாகிஸ்தான் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தவர்).

ஆனால் ஒவ்வொரு சமையல் எண்ணை நிறுவனமும் பல்வேறு ஊடகங்களில் தான் மட்டுமே ஆரோக்கிய வாழ்வளிப்பதாக பல லட்சம் செலவில் விளம்பரம் செய்கிறன. இது எப்படி நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டதாகும்? இந்த விடயத்தில் 'பூச்சிக்கொல்லி' குளிர்பான நிறுவனங்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.

3. இந்த அளவும் மீறி பயனாளி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று அக்கிரம வணிகம் நடத்தும் மக்கள் - இதில் போட்டியில்லா/போட்டிகளை ஒழித்த வணிகர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான உற்பத்தியாளர்களும் (நம் விவசாயிகள் உட்பட - எப்படியாவது உற்பத்தியை பெருக்கிவிடவேண்டும் என நஞ்சை விளைவிக்கும் பலர்) அடங்குவர். எந்தவகையில் வாங்குவோர் நலன் கருத்தில் கொள்கிறார்கள்
இவர்கள்?

4. நான் பிடித்த முயலுக்கு இருபது கால்- மேலுள்ள எல்லாவற்றுக்கும் மேலாக, நான் விற்க்கும் பொருள் தான் நல்ல பொருள் என்ற மனப்பாங்கு.

பத்து வணிக முயற்சிகளில் ஒன்பது தோற்பதற்கு இதுவே காரணம். அந்தக்காலத்து மர்பி (Murphy) ரேடியோவிலிருந்து இந்த காலத்து அராமஸ்கு (aramusk) சோப்பு/ அஞ்சு மாடி குமரன் ஜவுளிக்கடை வரையில் கோடிக்கணக்கான உதாரணங்கள்.

தனக்கு என்ன வேண்டும் என்று கணினியில் ஐந்தாண்டுத்திட்டம், லாப நட்டக் கணக்குகள் போடப் பிடிக்கும் நேரத்தை, செய்கின்ற பொருளை இன்னும் இன்னும் உருவேற்றி ஐந்து ஆறு சிக்மா (6 sigma) என்று ஜல்லியடித்து வீணாக்கும் நேரத்தை, நுகர்வோரிடம் நேரடியாக சென்று கேட்கப் பயந்து சந்தை ஆராய்ச்சி என்று பணத்தை, நேரத்தை வீணாக்கும் வியாபாரிகளே - வேறு என்னதான் வழி சொல்றே என்று முறைக்கிறீர்களா...

கொஞ்சம் பொறுங்கள்.. இன்னும் வரும்..

2 comments:

K.R.அதியமான் said...

what about the medium of exchange ?

if money supply is controlled and increased in proportion to the economic growth rate, (As in Germany for e.g) then the price rise and distortion in pricing will be totally different.

prices are determined by demand and supply, as well as the money supply available which acts as the medium of exchange. nothing subjective or emotionanl here.

நாஞ்சிலான் said...

அதியமான்,

வருகைக்கு நன்றி.

உங்கள் கருத்தில் நிச்சயம் உடன்படுகிறேன். விலைநிர்ணயத்தில் medium of exchangeம் பெரும் பங்கு வகிக்கிறது.