Monday, September 10, 2007

தப்பட்டைகிழவன் புதூர்

பொள்ளாச்சி அருகே 15 கி.மீ. தூரத்தில் ஓரு கிராமம். ஆழியாறு அணைப்பாசனத்தின் கடையில் உள்ள நிலங்கள். தென்னை, நெல், நிலக்கடலை முக்கிய பயிர்கள். பெரும்பாலும் வாய்க்கால் பாசனம்.

கோவையில் இருந்து நானும் வேளாண் பல்கலையிலிருந்து என் நண்பனும் சென்று சேரும்போது காலை பத்து. அப்போதே நூறு விவசாயிகளுக்கு மேல் கூட்டம். வேளாண் பல்கலையும் உலக நாட்டு குழும (United nations) வளர்ச்சி திட்டமும் சேர்ந்து நடத்தும் பயிற்சி முகாம். பயிருக்கு நீர் வள மேலாண்மை பற்றி தான் பயிற்சி. எங்களை பொள்ளாச்சியிலிருந்து அழைத்துச்சென்ற திட்ட அலுவலர் 'பயிற்சி முடிந்ததும் இலவசமா பயிர் விதை கொடுப்பதாய் இருக்கு. அதான் இந்தக் கூட்டம்' என்று குட்டை உடைத்தார்.

வளர்ச்சி திட்டத்தை முன்னின்று நடத்தும் பொதுப்பணித்துறையினரை காணவே காணோம். (அவர்கள்தான் பரம்பிக்குளம் ஆழியாறு அணை நீர் பாசன பகுதிக்கு பாசன நீர் மேலாண்மைக்காக இதை ஆரம்பித்தவர்கள்). திட்ட அலுவலர் இந்த பயிற்சி முகாமையே (முறைப்படி செய்யும் திட்டம்
இருந்தும் கூட) தன் சொந்த விருப்பமாக எடுத்து உழைக்கிறேன் என்கிறார்.

முகாம் ஆரம்பித்து. பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து, பகுதி நீர் மேலாண்மைக் குழுத் தலைவர் உரை முடிந்து (இந்த நீர் மேலாண்மைக் குழுக்கள் பற்றி நிறைய விவாதங்கள் இருக்கிறன. பின்பு பார்போம்) என் நண்பன் மற்றும் ஒரு வேளாண் விஞ்ஞானியின் உரை. இந்த முகாமின் தலைப்பு நிலக்கடலை பற்றி. ஆனால் பெரும்பாலான கேள்விகள் தென்னை பற்றியே. 'கடலை பற்றி பேசலாமே' என்ற கேள்விக்கு
பெரும்பாலானவர்கள் (குழுத் தலைவர் உள்பட), வேலையாட்கள் பற்றாக்குறையால் தென்னைக்குத் தாவி விட்டார்கள் என்று தெரிய வந்தது.

விஞ்ஞானிகளிடம் கேட்ட கடலை பற்றிய பற்றிய கேள்விகளிலும் பல உழவு வேலைகளுக்கு என்ன இயந்திரங்களை பயன்படுத்துவது என்பதே.

பின்னர் திட்ட அலுவலர் பொதுக்கேள்விகளுக்கு (பயந்து கொண்டே) நேரமளித்ததும் வந்த எல்லா கேள்விகளும் விவசாயத்துக்கு என்ன இயந்திரங்கள் பயன்படுத்தலாம், அவை வேளாண் பல்கலை மூலம் இலவசமாக கிடைக்குமா, ஆட்கள் தேவையை இன்னும் குறைக்க என்ன வழி என்பது போன்றே. நான் பேசிப்பார்த்த 6-7 விவசாயிகளும் குறைந்தது பள்ளி இறுதி முடித்தவர்கள்.

இதை தொடர்ந்து என்னுள் எழுந்த கேள்விகள்-

1. வேலையாட்கள் பற்றாக்குறையே விவசாயிகளின் பெரிய தடங்கலா - தமிழகத்தில் எல்லா இடங்களிலும்? அப்படியென்றால் இது நாள் வரை வயல் வேலை மட்டுமே செய்துவந்த ஆட்கள் அதிக கூலி கிடைக்கும் வேறு வேலை செய்கிறார்களா?

2. திரும்பதிரும்ப பயிற்சி முகாமில் விவசாயிகளின் கேள்விகள், என்ன இலவசமாக கிடைக்கும் என்றே இருந்த மாதிரியே தமிழகத்தில் பிற விவசாயிகளும் எதிர்பார்க்கிறார்களா? அதுவும் நிலக்கடலை, தென்னை போன்ற பணப்பயிர் விவசாயிகளுக்கே இதுபோல எதிர்பார்புகள் என்றால் சிறு\குறு விவசாயிகள்?

நான் பார்த்தது (சமீபத்தில் - பொருளாதார சிந்தனையுடன்) இந்த ஒரு கிராமந்தான். விவசாய அன்பர்களிடமிருந்து மேலும் விவரங்கள் எதிர்பார்கிறேன்.