Monday, September 10, 2007

தப்பட்டைகிழவன் புதூர்

பொள்ளாச்சி அருகே 15 கி.மீ. தூரத்தில் ஓரு கிராமம். ஆழியாறு அணைப்பாசனத்தின் கடையில் உள்ள நிலங்கள். தென்னை, நெல், நிலக்கடலை முக்கிய பயிர்கள். பெரும்பாலும் வாய்க்கால் பாசனம்.

கோவையில் இருந்து நானும் வேளாண் பல்கலையிலிருந்து என் நண்பனும் சென்று சேரும்போது காலை பத்து. அப்போதே நூறு விவசாயிகளுக்கு மேல் கூட்டம். வேளாண் பல்கலையும் உலக நாட்டு குழும (United nations) வளர்ச்சி திட்டமும் சேர்ந்து நடத்தும் பயிற்சி முகாம். பயிருக்கு நீர் வள மேலாண்மை பற்றி தான் பயிற்சி. எங்களை பொள்ளாச்சியிலிருந்து அழைத்துச்சென்ற திட்ட அலுவலர் 'பயிற்சி முடிந்ததும் இலவசமா பயிர் விதை கொடுப்பதாய் இருக்கு. அதான் இந்தக் கூட்டம்' என்று குட்டை உடைத்தார்.

வளர்ச்சி திட்டத்தை முன்னின்று நடத்தும் பொதுப்பணித்துறையினரை காணவே காணோம். (அவர்கள்தான் பரம்பிக்குளம் ஆழியாறு அணை நீர் பாசன பகுதிக்கு பாசன நீர் மேலாண்மைக்காக இதை ஆரம்பித்தவர்கள்). திட்ட அலுவலர் இந்த பயிற்சி முகாமையே (முறைப்படி செய்யும் திட்டம்
இருந்தும் கூட) தன் சொந்த விருப்பமாக எடுத்து உழைக்கிறேன் என்கிறார்.

முகாம் ஆரம்பித்து. பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து, பகுதி நீர் மேலாண்மைக் குழுத் தலைவர் உரை முடிந்து (இந்த நீர் மேலாண்மைக் குழுக்கள் பற்றி நிறைய விவாதங்கள் இருக்கிறன. பின்பு பார்போம்) என் நண்பன் மற்றும் ஒரு வேளாண் விஞ்ஞானியின் உரை. இந்த முகாமின் தலைப்பு நிலக்கடலை பற்றி. ஆனால் பெரும்பாலான கேள்விகள் தென்னை பற்றியே. 'கடலை பற்றி பேசலாமே' என்ற கேள்விக்கு
பெரும்பாலானவர்கள் (குழுத் தலைவர் உள்பட), வேலையாட்கள் பற்றாக்குறையால் தென்னைக்குத் தாவி விட்டார்கள் என்று தெரிய வந்தது.

விஞ்ஞானிகளிடம் கேட்ட கடலை பற்றிய பற்றிய கேள்விகளிலும் பல உழவு வேலைகளுக்கு என்ன இயந்திரங்களை பயன்படுத்துவது என்பதே.

பின்னர் திட்ட அலுவலர் பொதுக்கேள்விகளுக்கு (பயந்து கொண்டே) நேரமளித்ததும் வந்த எல்லா கேள்விகளும் விவசாயத்துக்கு என்ன இயந்திரங்கள் பயன்படுத்தலாம், அவை வேளாண் பல்கலை மூலம் இலவசமாக கிடைக்குமா, ஆட்கள் தேவையை இன்னும் குறைக்க என்ன வழி என்பது போன்றே. நான் பேசிப்பார்த்த 6-7 விவசாயிகளும் குறைந்தது பள்ளி இறுதி முடித்தவர்கள்.

இதை தொடர்ந்து என்னுள் எழுந்த கேள்விகள்-

1. வேலையாட்கள் பற்றாக்குறையே விவசாயிகளின் பெரிய தடங்கலா - தமிழகத்தில் எல்லா இடங்களிலும்? அப்படியென்றால் இது நாள் வரை வயல் வேலை மட்டுமே செய்துவந்த ஆட்கள் அதிக கூலி கிடைக்கும் வேறு வேலை செய்கிறார்களா?

2. திரும்பதிரும்ப பயிற்சி முகாமில் விவசாயிகளின் கேள்விகள், என்ன இலவசமாக கிடைக்கும் என்றே இருந்த மாதிரியே தமிழகத்தில் பிற விவசாயிகளும் எதிர்பார்க்கிறார்களா? அதுவும் நிலக்கடலை, தென்னை போன்ற பணப்பயிர் விவசாயிகளுக்கே இதுபோல எதிர்பார்புகள் என்றால் சிறு\குறு விவசாயிகள்?

நான் பார்த்தது (சமீபத்தில் - பொருளாதார சிந்தனையுடன்) இந்த ஒரு கிராமந்தான். விவசாய அன்பர்களிடமிருந்து மேலும் விவரங்கள் எதிர்பார்கிறேன்.

Monday, August 13, 2007

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.: விவசாயி - என்னதான் தீர்வு?

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.: விவசாயி - என்னதான் தீர்வு?

நமக்கு தகவல் தொழில் நுட்பம் தெரிந்ததாலேயே தீர்வும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்திருக்க தேவையில்லையே?

Friday, August 10, 2007

சில நாள் இன்பமா அல்லது பல நாள் இன்பமா? முரண் 3

வேறு எந்த முரணை விடவும் இது நிச்சயம் அதிகம் விவாதிக்கப்படலாம்.

ஒரு நாள் அப்பாவும் பையனும் எம்ஜியார் படம் போனார்கள். படம் முடிவில் அப்பா மகனிடம் கேட்டார் 'யாரை போல நீ இருக்க ஆசை? எம்ஜியார் மாதிரியா?'. பையன் சொன்னான் ' எம்ஜியார் மாதிரி காலமெல்லாம் கஷ்டப்பட்ட பிறகு கடைசி காலத்தில மட்டும் சுகமாய் இருந்தா பிரயோசனமில்லே. நம்பியார் மாதிரி கடைசி காலத்தில கஷ்டப்பட்டாலும் வாழ்க்கை பூரா சுகமா இருக்குறதுதான் எனக்கு புடிச்சிருக்கு.'

சிரிப்பாக வந்தாலும், பெரும் பாலும் இப்படித்தான் போகுது பல பேரோட ஆசை. 'வரவு எட்டணா, செலவு பத்தணா', Instant Gratification, Consumerism என்கிறார்கள் பிடிக்காதவர்கள்.

உதாரணங்கள் - எப்பாடு பட்டாவது கடன் வாங்கி பெரிய காரோடு வலம் வருவது. (அதை நெரிசல் சாலைகளில் பயன்படுத்தி தானும் மற்றவரும் பெட்ரோல் குடி(த்து)க்க செய்து) பணம் வீணாக்குவது மட்டுமன்றி, புதிய பெருங் கார் வாங்க, பராமரிக்க மேலும் மேலும் செலவளிப்பது.

விவசாயிகள் மாட்டுப்புண்ணாக்குடன் யூரியா உரம் சேர்த்து கறவை மாட்டுக்கு கொடுப்பார்கள். அதிக பால் கொடுக்க வேண்டி. மாடு கொஞ்ச நாளுக்கு பால் அதிகம் கறந்து விட்டு பின்பு சத்திழந்து விடும். பயிர் மண்ணே அப்படி ஆகும் போது மாடு அப்படி ஆவதில் வியப்பென்ன?

இதே போல் நமது பயன் படுத்துவதில் எல்லை மீறிய குறுங்கால வசதிகள் (உதாரணத்துக்கு - போக்குவரத்து, குளிர்பதன வசதிகளுக்காக கட்டுக்கடங்கா உபயோகமாகும் மின்சாரம், கனிம எரிபொருட்கள் மூலமாக)நமக்கே நெடுங்கால ஊறு விளைவிப்பதற்கு ஓசோன் ஓட்டை, சுற்றுப்புற மாசு என கணக்கிலடங்கா உதாரணங்கள்.

நான் முதலில் சொன்னது போல இந்த முரணுக்கான காரணமும் தீர்வும் சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள படுவது சந்தேகமே. பல விஞ்ஞானிகளும் பொருளாதார வல்லுனர்களுமே இன்னும் இந்த முரணையே ஏற்றுக்கொள்ள வில்லை.

Monday, July 2, 2007

பலமே பலவீனம் - முரண் 2

இதுவும் நாம் பொதுவாக பார்க்கும் நிகழ்வுதான். மிகவும் நன்றாக ஒடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். நல்ல சக்கை போடு போட்ட படி நல்ல பேருடன் நடந்த வண்ணமே திடீரென நின்று விடும். வணிக உலகில் மிக இயல்பானது இது. வெளியிலிருப்பவருக்கு ஏன் என்றே புரியாது. (உள்ளிருப்பவர் புரிந்து கொண்டதும் பெரும்பாலும் தவறாக). மேலும் ஒரு நிறுவனம் மட்டுமன்றி ஒரு பெரும் வணிகத்துறை (or industry)யே கூட படுத்த சரித்திரங்களும் நாம் பார்த்தனவே. (Web Commerce ஞாபகம் இருக்கா?).

முதலில் எல்லோருக்கும் கண்ணில் படுவது முதலாளி(களின்)யின் மெத்தனம், தாயாதி சண்டைகள் (அம்பானி சகோதரர் போல), பலமான சந்தை போட்டி முதலான M.B.A. மக்கள் தரும் Competitive Analysis போன்ற செத்த எலியடிக்கும் பகுப்பாய்வுகள். அதை வைத்துக் கொண்டு பங்கு சந்தை ஆய்வாளர்கள் செய்யும் மறு ஆய்வுகள்.

ஆனால் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'. ஒரு பலமே பலவீனமாவதுதான் இதற்கு காரணம். யானை தன் தலையில் தானே மண்ணள்ளி போடுவது போல அல்ல இது.

முந்தைய பதிவை போல இதுவும் ஒரு முரண்தான். இயற்கையின் சமன் படுத்தும் விதிதான். அது மட்டுமன்றி இந்த விதியின் செயல்பாடு நாம் நேரடியாக செயலுக்கும் விளைவுக்கும் பொருத்திப் பார்க்கவும் முடியாதது வேறு நாம் இந்த முரணை புரிந்து கொள்ள தடை செய்கிறது.

சில உதாரணங்கள் முதலில்.

1. இந்தியா உலக வணிகத்தின் சக்கரவர்த்தியாக இருந்த காலத்தில் இந்த முரணின் வெளிப்பாடு - வணிகத்தால் வசதி பெற்ற அரசருக்கும் இல்லாதோருக்கும் இருந்த முரண், இந்தியாவை பார்த்து ஏங்கிய ஐரோப்பியரின் (கவனிக்க - இங்கும் ஒரு முரண், நாடுகளுக்கிடையே) தலையீட்டுடன் பெரிது பட்டு, நாம் அடிமைபட்டு இந்தியா உலக பொருளாதரத்தில் பாதாளம் போன கதை. அடிமையாக்கிய இங்கிலாந்து தற்போது அமெரிக்காவுக்கு அடிவருடுவது அடுத்த கதை.

2. சணல் தொழில், ரேடியோ மெக்கானிசம் படிப்பு, கப்பல் கப்பலாக வந்திறங்கிய பனிக்கட்டி - ஒரு காலம் கொடி கட்டி பறந்து இப்போது நாம் மறந்து போன பல தொழில்கள்.

3. இன்று ஆல் போல் தழைத்து வரும் கணினி துறையிலேயே பல - dBase, FoxPro, Lotus 1-2-3....

முன் கூறியபடி வெளிக்கிடையான பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படையில் பலம், பலவீனமாவதே முக்கியம். எப்படியென்றால், எந்த ஒரு வெற்றிக்கும், அதனை முனைவோர் (ஒரு நாட்டினரோ அல்லது தொழில் முனைவோரோ எவராயினும்), தம் பலத்தை முழுமூச்சாக முயன்றால்தான் முடியும் (திண்ணியராக). அச்சமயம் வேறு எந்த எண்ணமும் இன்றி.

ஆனால் இங்கேதான் இயற்கை விளையாடுகிறது. இயற்கை (மனித இயற்கையும் சேர்த்துதான்), அவ்வளவு தூரம் எளிதாக கையாளும் வகையில் இல்லையே! அதனால் திண்ணியர் எண்ணியாங்கு (மட்டுமே) எண்ணியதை அடைந்தாலும், இந்த (முயலும்போது) எண்ணாமல் விட்ட காரணிகள் (factors), பலவீனத்தின் வித்தாகிறன. (பொருளாதார வல்லுனரகள் இதனை invisible factors என்றும், 'other things being equal' என்று நடைமுறையில் நடவா சால்ஜாப்புகள் சொல்லியும் இந்த முரணை மறக்கடித்து விடுவார்கள்).

இந்திய பொருளாதார வல்லுனரகள் இது நாள்வரை ஏற்றுமதிக்கு (ஏற்றுமதியாளருக்கு) என்னவெல்லாம் சலுகை கொடுத்து டாலர் வரத்துக்காக பாடுபட்டார்கள்? வரி, வட்டி, சுங்கம் என நாட்டு மக்கள் கொட்டி கொடுத்த (கொடுத்துக்கொண்டிருக்கும்) விலை எவ்வளவு? இப்போது டாலர் கொட்டிக் கிடக்க அதனால் வந்த வருமானக்குறைக்கும் அந்த ஏழை-ஏற்றுமதியாளருக்கு, மேலும் சலுகை கொடுக்க முயல்கிறார்கள். பலம், பலவீனமாவதற்கு இந்த உதாரணத்தை சிந்தித்தாலே போதும்.

என்ன செய்யலாம் இந்த முரணுக்கு?

Saturday, June 30, 2007

யாருக்காக - முரண் 1

இந்த பதிவு தொடருக்குக்கு சிவாவின் இந்த பதிவு ஒரு வித்து.

தொடருக்கு, முதலில் சில அடிப்படை கருத்துகள்.

விற்க்கும் செயல் (sales function) ஒரு பொருளாதார முரண். (அதைவிட விருப்பங்களின் முரண்).

ஒரு பொருளை விற்பவர் பெரும்பாலும் தனக்கு வேண்டிய வேறு ஏதோ ஒரு பொருளுக்காக தனக்கு (ஒருவேளை) சொந்தமான இந்த பொருள் (அல்லது) சேவையை விற்கிறார். (ஒரு வகையில் அவருக்கு அந்த விற்க்கும் பொருள் தேவையாக இல்லை). வாங்குபவரோ அந்த விற்பனை பொருளை மட்டுமே வேண்டும் (தனது ஏதோ ஒரு தேவைக்காக) என்று வாங்க நினைக்கிறார்.

இதில் என்ன முரண்?

'இது எப்போவும் நடக்கும் விடயம் தானே?' என்று தோன்றுகிறதா? நான் சொல்ல வரும் சேதிக்கு இதுதான் அடிப்படை.

இந்த விருப்பங்களின் முரண்பாடு நம் உள்நோக்கங்களில் அதை ஒட்டிய செயல்களில் வெளிப்படுவதுதான் வேண்டாத விடயம்.

முதலில் நம் உள்நோக்கம் எவ்வாறெல்லாம் செயலாக வெளிவருகிறது என்று பார்ப்போம்.

1. விலை நிர்ணயம் - விற்பனையாளர் தன்னுடய செலவு மற்றும் இலாபம் சேர்த்து விலை நிர்ணயம் செய்வது. இந்த முறையில் வாங்குபவரது நோக்கம் எங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது? உலகத்தில் பாதி பொருட்கள் இப்படித்தான் விற்கப்படுகிறது. பெரும்பாலான பெருந்திரள் வணிக(mass marketed)மாகும் பொருட்கள் அதிலும் 'நானும் உண்டு' (me too) மாதிரி பொருட்கள் விலை பெரும்பாலும் இப்படித்தான். பெருந்திரள் வணிகமாகும், நாம் தினமும் உடனடி உபயோகமாக்கும் பொருட்கள் (சோப்பு, உணவுப் பொருட்கள்) விலை நிர்ணயம் செய்ய முதலில் அடக்க விலையை பார்க்கிறார் வியாபாரி. அதாவது வாங்குபவரது வாங்கும் சக்தி (purchasing capacity) (அ) பயன்பாட்டின் ஒரு பகுதி(worth of usage
value)யாக பொருளின் விலையை நாம் யோசிப்பதில்லை.

பொருளாதாரம் இதை எப்படி பார்க்கிறது என்றால், விலையும் பயன்பாடும் ஒரு புள்ளியில் ஒருமைபடும்போது வாங்குபவர் தனக்கு பிடித்த கட்டுப்படியாகும் விலையை கொடுப்பது சரிதானே என்று வாதிக்கிறது. ஒரு கச்சிதமான போட்டியமைந்த (perfect competition) சந்தையில் (ஆனால் பொருளாதார வல்லுனர்களே அப்படி ஒரு நிலைமை நடைமுறையில் காணக்கிடைக்காது என ஒத்துக்கொள்ளும் விடயம் இது) இப்படி சரியான விலை அமையலாம். பல நேரம் நாம் பார்ப்பது குறைந்த போட்டியாளர்கள் (அ) ஒரே வணிக மையம் விற்பனை செய்யும் பொருளை, சரியான, வேண்டிய அளவான தகவலும் இல்லாமல் பயனர்கள் வாங்க போட்டி போடும் சந்தைகள்தாம்.

இதுவே வாடிக்கையாகி, பெரும்பாலான வியாபாரிகள் மாற்று விலை நிர்ணய யுக்திகளை நினைத்தும் பார்ப்பதில்லை. இதில் கொஞ்சம் வித்தியாசமாய் யோசிக்கும் வியாபாரிகள் 'சுபிக்சா' 'பிக் பசார்' என்று பணம் கொழிக்கிறார்கள், மற்றவர்களை விட சிறிது இலாபம் குறைத்துக் கொடுத்து.

'நானும் உண்டு' (me too) போட்டியிலே ('மைசூர் சாண்டல்' நன்கு விற்றால் 'கோகுல் சாண்டல்' என்றோ 'மைசூல் சாண்டல்' என்றோ பொருளுக்கு பெயரிட்டு விற்பவர்களும் இதே வரிசையில் தான். சிறிது விலை குறையும் என்ற ஒரே ஒரு பயனைத் தவிர வேறு எந்த வகையிலும் நுகர்வோரை நினைத்துப் பார்க்காத புல்லுருவிகள்.

இதில் பல சமயங்களில் நடக்கும் ஒரு கூத்து, ஒரு நல்ல பொருள் அல்லது சேவைக்கு விற்பவர் (முதலில்) நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு இலாபத்தை கொட்டிகொடுக்கவும் மக்கள் இன்றளவும் தயாராக இருந்தும் கூட இந்த மனப்பாங்கு தொடர்வது.

2. மாறுபாடில்லா பொருட்கள் மற்றும் வாங்குவோருக்கு தேவையில்லா விடயங்கள் - உலகத்தில் உள்ள எல்லா சமையல் எண்ணையும் உடலுக்கு கேடுதான் என்கிறார் பெங்களூரில் ஒரு உலகப்புகழ் பெற்ற இதய மருத்துவர். (சமீபத்தில் பாகிஸ்தான் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தவர்).

ஆனால் ஒவ்வொரு சமையல் எண்ணை நிறுவனமும் பல்வேறு ஊடகங்களில் தான் மட்டுமே ஆரோக்கிய வாழ்வளிப்பதாக பல லட்சம் செலவில் விளம்பரம் செய்கிறன. இது எப்படி நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டதாகும்? இந்த விடயத்தில் 'பூச்சிக்கொல்லி' குளிர்பான நிறுவனங்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.

3. இந்த அளவும் மீறி பயனாளி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று அக்கிரம வணிகம் நடத்தும் மக்கள் - இதில் போட்டியில்லா/போட்டிகளை ஒழித்த வணிகர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான உற்பத்தியாளர்களும் (நம் விவசாயிகள் உட்பட - எப்படியாவது உற்பத்தியை பெருக்கிவிடவேண்டும் என நஞ்சை விளைவிக்கும் பலர்) அடங்குவர். எந்தவகையில் வாங்குவோர் நலன் கருத்தில் கொள்கிறார்கள்
இவர்கள்?

4. நான் பிடித்த முயலுக்கு இருபது கால்- மேலுள்ள எல்லாவற்றுக்கும் மேலாக, நான் விற்க்கும் பொருள் தான் நல்ல பொருள் என்ற மனப்பாங்கு.

பத்து வணிக முயற்சிகளில் ஒன்பது தோற்பதற்கு இதுவே காரணம். அந்தக்காலத்து மர்பி (Murphy) ரேடியோவிலிருந்து இந்த காலத்து அராமஸ்கு (aramusk) சோப்பு/ அஞ்சு மாடி குமரன் ஜவுளிக்கடை வரையில் கோடிக்கணக்கான உதாரணங்கள்.

தனக்கு என்ன வேண்டும் என்று கணினியில் ஐந்தாண்டுத்திட்டம், லாப நட்டக் கணக்குகள் போடப் பிடிக்கும் நேரத்தை, செய்கின்ற பொருளை இன்னும் இன்னும் உருவேற்றி ஐந்து ஆறு சிக்மா (6 sigma) என்று ஜல்லியடித்து வீணாக்கும் நேரத்தை, நுகர்வோரிடம் நேரடியாக சென்று கேட்கப் பயந்து சந்தை ஆராய்ச்சி என்று பணத்தை, நேரத்தை வீணாக்கும் வியாபாரிகளே - வேறு என்னதான் வழி சொல்றே என்று முறைக்கிறீர்களா...

கொஞ்சம் பொறுங்கள்.. இன்னும் வரும்..

Friday, June 29, 2007

எனக்கும் ஒரு ஒலிபெருக்கி கொடுங்கப்பா

எனக்குப் பிடித்த ஒரு துறை பொருளாதாரம். அதில் பல பேர் ஏற்கனவே எழுதி வருவதால் புதிதாய் என்ன எழுதலாம் என்று யோசித்ததில் நான் பல வருடங்களாக குப்பை கொட்டிய (கொட்டி 'முடித்த') விற்பனை துறை பற்றி எழுதலாம் என்று எண்ணம். இணையத்தில் தமிழ் வணிக முன்னேற்றத்திற்க்கு எழுதும் பலரோட முயற்சிக்கு என்னோட பங்களிப்பா இந்த 'கன்னி' முயற்சி.
சிவாவைப்போல புத்தகம் எல்லாம் போடும் அளவுக்கு எழுத (ஆசையிருந்தும்) நேர வசதியில்லை. இந்த பதிவில் என்ன எழுதலாம் என எதுவும் யாருக்கும் தோன்றினால், தயவு செய்து சொல்லுங்களேன்.

எனது முதல் தமிழ் பதிவு

எனது Manifornothing வலைப்பூ பல நாள் முன்பே ஆரம்பிதிதிருந்தும் இது நாள் வரை எழுதவே இல்லை. தமிழில் எழுதும் வசதி தெரிந்ததும் மீண்டும் ஒரு முயற்சி இப்போது. எதாவது ஒரு நல்ல இடுகைக்கு முயற்சிக்க வேண்டும்.